கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சகாயம். இவர் கடந்த 15 வருடங்களாக அன்னாசி விவசாயம் செய்துவருகிறார். விவசாயி சகாயம் கடந்த மே மாதம் கன்னியாகுமரி தோட்டக்கலை அலுவலர்களின் ஆலோசனைப்படி மஞ்சாலுமூடு அருகே முக்கூட்டுக்கல் பகுதியில் ஒன்றரை ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார். அந்நிலத்தில் ரெட்லேடி, கோவை போன்ற ரகங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பப்பாளி கன்றுகளை நடவும் செய்து மூன்று மாதம் பராமரிப்பு செய்து வந்துள்ளார்.
மகசூல் வரும் வேளையில் சுமார் 400க்கும் மேற்பட்ட பப்பாளி கன்றுகளில் காய்கள் காய்க்காமல் பூக்க மட்டுமே செய்துள்ளன. இதனால், அதிர்ச்சியடைந்த விவசாயி சகாயம் பப்பாளி கன்றுகளை பரிசோதித்ததில் அந்த கன்றுகள் முழுவதும் ஆண் இனத்தைச் சேர்ந்தவை என்பது தெரியவந்துள்ளது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி சகாயம் தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொண்டு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதற்கு அலுவலர்கள் எந்த பதிலும் அளிக்காமால் அலட்சியமாக இருந்துள்ளனர்.