கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பள்ளியாடி பகுதியில் முருங்கவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (42). இவர் அதே பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று (ஜன.07) அவர் தனது நண்பர்களுடன் வெளியே சென்று உள்ளார். அவர்கள் முருங்கவிளையில் உள்ள குளத்தங்கரையில் அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
அப்போது குடிபோதையில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறி உள்ளது. இதையடுத்து அங்குக் கிடந்த கட்டை ஒன்றை எடுத்து ராஜ்குமாரை அவரது நண்பர் ஒருவர் தாக்கி உள்ளார். இதில் ராஜ்குமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நண்பரின் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக அங்கிருந்து ராஜ்குமார் தப்பி ஓடியுள்ளார். ஆனால் நிலை தடுமாறி குளத்துக்குள் விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதற்கிடையில், ராஜ்குமாரைத் தாக்கிய அவரது நண்பர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இன்று (ஜன.08) காலை குளத்தில் குளிப்பதற்காக வந்த போது ஆண் சடலம் கிடந்ததைப் பார்த்துள்ளனர். பின்னர் இது குறித்துத் தக்கலைக் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினர் சடலத்தை மீட்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் குளத்தில் இருந்த சடலத்தை மீட்க முடியவில்லை.