கன்னியாகுமரியில் மேள தாளங்களுடன் 'உலக மக்கள் தொகை தின' கொண்டாட்டம்! கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது. சிலம்பாட்டம், கரகாட்டம் நிகழ்ச்சியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
'உலக மக்கள்தொகை தினம்' ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் 1989ஆம் ஆண்டு முதல் இது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக மக்கள் தொகையானது நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அது தொடர்பான பிரச்னைகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன.
வறுமை, ஆரோக்கியம், வேலை வாய்ப்பு, பொருளாதாரம் உட்பட பல்வேறு விதமான பிரச்னைகளை நாம் சந்தித்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை அதிகரிக்கும்போது அது தொடர்பாக ஏற்படும் பிரச்னைகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே, இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தவும்; அதனை மக்களுக்குத் தெரிவிக்கவும் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு, இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரிக்கு பேரணி புறப்பட்டது. மேளதாளங்கள் முழங்க, நாட்டுப்புற கலைகளான சிலம்பாட்டம், கரகாட்டம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் இந்தப் பேரணியானது புறப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதர் கொடியசைத்து துவக்கி வைத்த இந்தப் பேரணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மணவிகளும் பங்கேற்றனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் மாவை மாணவிகள் மத்தியில் பேசிய போது, ''இந்த உலக மக்கள் தொகை தினத்தின் நோக்கமானது பெருகிவரும் மக்கள் தொகையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஆகும். நாட்டின் மேம்பாட்டிற்கும், தாய்மார்களின் நல்வாழ்வுக்கும், குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது முதன்மையானது மட்டுமின்றி முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும்'', எனக் கூறினார்.
மேலும், "சிறு குடும்ப நெறி, திருமணத்திற்கு ஏற்ற வயது, முதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்குமான இடைவெளி, தாய்மார்களின் உடல் நலத்தைப் பாதுகாத்தல், ஆணும், பெண்ணும் சமம் என்பதற்கு செயல் வடிவம் கொடுப்பது, பெண் கல்வியை ஊக்குவிப்பது, இளம் வயது திருமணம் மற்றும் கர்ப்பத்தைத் தடுப்பது, மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் தாக்கத்தை குறைப்பது, சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பை அதிகரிப்பது, வறுமையை ஒழிப்பது உள்ளிட்டவை விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மையப் பொருளாகும்'' எனவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, குடும்ப நலத்திட்டத்தை மக்கள் இயக்கமாக மாறச் செய்ய, நம்மால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார். இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் விளம்பர பதாகைகள் வெளியிடப்பட்டன, மேலும் மஞ்சப்பை வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் உலக மக்கள் தொகை உறுதி மொழியை அனைவரும் எடுத்து கொண்டனர்.
பேரணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி நடந்து சென்றனர். இந்த நிகழ்ச்சியில் நாட்டுப்புற விளையாட்டுகள் அடிமுறை, சிலம்பம் போன்ற பல்வேறு சாகசங்களை மாணவ மாணவிகள் நடத்தி காண்பித்தனர். இதனை திரளான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்: முதலமைச்சர்