கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகேயுள்ள செண்பகராமன்புதூர் - பூதப்பாண்டி சாலையில் தோவாளை வாய்க்காலுக்கு அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 3.45 செண்ட் இடம் பூமணிதாஸ் என்பவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டடம் கட்டியதுடன் அக்கட்டடத்தில் முறைகேடான வகையில் மின் இணைப்பு பெற்று அதனை அரசு டாஸ்மாக் மதுபான கடைக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார்.
இந்த நில ஆக்கிரமிப்பு சம்பந்தமாக பொதுப்பணித்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததன் அடிப்படையில் கடந்த ஆகஸ்டு மாதம் 13 ஆம் தேதி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அவர்களுடன் நில அளவைத்துறை அலுவலர்களும் சென்று நிலத்தை அளந்து ஒரு பகுதியை அன்றே அப்புறப்படுத்தினர். மேலும் ஆக்கிரமிப்பு இடத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் மதுபானக்கடையையும் அங்கிருந்து உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். அதனடிப்படையில் அங்கு இயங்கிவந்த டாஸ்மாக் கடை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.