கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளிடையே போக்குவரத்துக் காவல் துறை சார்பில் விபத்தில்லா கன்னியாகுமரி 2020 என்ற தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்றது. விழிப்புணர்வு பரப்புரையின்போது போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் செல்லசாமி தலைமையில் காவலர்கள் கன்னியாகுமரி பகுதிகளிலுள்ள புனித அந்தோணியார் பள்ளி, விவேகானந்தா கேந்திரா பள்ளி, அமிர்தா பள்ளி, ஆகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று மாணவ, மாணவிகளிடையே சாலை பாதுகாப்பு குறித்தும், விபத்துகள் குறித்தும் விளக்கமளித்தனர்.
மேலும், 18 வயது நிரம்பாத மாணவ, மாணவிகள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டக் கூடாது, மாணவ, மாணவிகள் பள்ளிக்கு இருசக்கர, நான்கு சக்கர வாகனம் ஓட்டிவருவதை நிர்வாகத்தினர் கண்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வாகனம் ஓட்டிவந்தால் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவலர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தினர்.