குமரி மாவட்டம் களியக்காவிளையில் கடந்த 8ஆம் தேதி சோதனைச்சாவடியில் காவலிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் கொலைசெய்யப்பட்டார்.
இச்சம்பவம் தென்னிந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். தற்போது இவர்கள் காவல் துறையினரின் காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.
இவர்கள் கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி, கத்தியை காவல் துறையினர் கைப்பற்றினர். மேலும் இவர்களிடமிருந்த கைப்பை நெய்யாற்றின்கரை பகுதியில் உள்ள பள்ளி வாசலிலிருந்து மீட்கப்பட்டது. இருவரையும் கொலை நடந்த பகுதிக்கு அழைத்துச்சென்று கொலை செய்தது எப்படி என நடித்துக் காட்டும் நிகழ்வும் நடந்தது.
இதற்கிடையில் இவர்கள் இருவரும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதும், இவர்களது சதித் திட்டம் குறித்து விசாரணை மேற்கொள்ளவும் இந்த வழக்கினை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்தது.
இந்நிலையில் இன்று தேசிய புலனாய்வு முகமை துணை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், ஆய்வாளர் சிவகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் நாகர்கோவிலில் உள்ள நேசமணி நகர் காவல் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தவ்பீக், அப்துல் சமீம் ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். கேரள மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் அனிஷுடன் இருந்தார்.
வில்சன் கொலை வழக்கு: குற்றவாளிகளை விசாரித்த என்ஐஏ அலுவலர்கள் இந்த விசாரணையில் பயங்கரவாத அமைப்புகளுடன் இவர்களுக்கு இருக்கும் பல தொடர்புகள் வெளிச்சத்திற்கு வரும் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கு மொத்தமும் தேசிய புலனாய்வு முகமை ஏற்றுக்கொண்டு விசாரணை மேற்கொள்ள வாய்ப்பு அதிகமாக இருப்பதாகக் காவல் துறையினரின் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது.