கன்னியாகுமரி மாவட்டம் மாதவபுரம் பகுதியில் நேற்று புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ஒற்றையால்விளை, மாதவரம் ,சுவாமிநாதபுரம், கலைஞர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு டாஸ்மாக் கடையை மூடக்கோரி டாவிஜய நாராயணபுரம் பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக நேற்றும் (20.9.19) டாஸ்மாக் கடை முன்பு திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அதிமுக அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அவைத்தலைவர் தம்பிதங்கம், துணைச் செயலாளர் முத்துசாமி, மாவட்ட அதிமுக இலக்கிய அணி துணைச் செயலாளர் ஹரிகிருஷ்ணன் பெருமாள் உள்ளிட்டோர் தாமாக முன்வந்து மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.