கன்னியாகுமரி: கரோனா தடுப்பு நடவடிக்கைகள், எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் நாஞ்சில் அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் டிஆர்ஓ ரேவதி, மருத்துவத் துறை இணை இயக்குநர் பிரகலாதன், மக்கள் நல்வாழ்வுத் துறை துணை இயக்குநர் கிருஷ்ணலீலா, நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் செல்வராஜ், கரோனா சிகிச்சை வல்லுநர் மருத்துவர் பிரின்ஸ் பயாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் பேசியதாவது:
“கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுவருகின்றன. இதன் காரணமாக நோய்த்தன்மை தற்பொழுது குறைய தொடங்கியுள்ளது.
கிராமப் பகுதிகளில் அதிக அளவில் தடுப்பூசி போடும் பணிகள் நடந்துவருகின்றன. இதில் 18 வயது முதல் 44 வயது வரை உட்பட்டவர்களுக்கு ஒரு பகுதியாகவும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு பகுதியாகவும், இரண்டாம் கட்ட தடுப்பூசி போட்டவர்களுக்கு இன்னொரு பகுதியாகவும் போடப்பட்டுவருகிறது.
தடுப்பூசி போடும் இடங்களில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக வந்த புகாரை அடுத்து, தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்வதற்காகப் புதிய செயலியை அறிமுகப்படுத்த ஆலோசித்துவருகிறோம். இது விரைவில் நடைமுறைக்கு வரும்.