கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக இருந்துவந்த பிரசாந்த், இடமாறுதல் செய்யப்பட்டு குமரி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக சென்னை தலைமைச் செயலகத்தில் நிதித்துறை இணைச் செயலாளராக பணியாற்றிவந்த அரவிந்த் நியமிக்கப்பட்டார்.
குமரியில் புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு: தாலுகா அலுவலகத்தில் திடீர் ஆய்வு! - மாவட்ட ஆட்சியர் அரவிந்த்
கன்னியாகுமரி: மாவட்டத்தின் 51ஆவது புதிய ஆட்சியராக பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் குழித்துறை தாலுகா அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களிடம் தகவல்களைக் கேட்டறிந்தார்.
இவர், நேற்று முன்தினம் (அக்.29) குமரி மாவட்டத்தின் 51ஆவது ஆட்சியராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து இவர் குமரி மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், நீர்நிலைத் தேக்கங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
இந்நிலையில் இன்று (அக்.31) குழித்துறை தாலுகா அலுவலகத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் அங்குள்ள அலுவலர்களிடம் பணிகள் குறித்த தகவல்களைக் கேட்டறிந்தார். மேலும் அலுவலகத்திலிருந்த கோப்புகளைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.