கன்னியாகுமரி: திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் இருந்தபோது, அதன் தலைநகராக தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் இருந்து வந்தது. இங்கு மன்னர்கள் காலத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர், குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த பின்பு நிர்வாக வசதிக்காக இதன் தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.
அதன் பின்பு, நவராத்திரி விழா திருவனந்தபுரத்தில் ஆண்டுதோறும் பத்து நாட்கள் நடைபெற்று வருகிறது. தலைநகரை திருவனந்தபுரத்திற்கு மன்னர் மாற்றிய பின்பும், பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து வருடம்தோறும் நவராத்திரி விழா துவங்கும் முன்பாக, குமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவார கட்டு சரஸ்வதி அம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னு தித்த நங்கை அம்மன் ஊர்வலமாக திருவனந்தபுரம் எடுத்துச் செல்லப்படும்.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்பதற்காக 3 சாமிகளும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, நவராத்திரி தொடக்க நாளில் இருந்து விழா முடியும் வரை திருவனந்தபுரத்தில் வைத்து வழிபாடு செய்யப்படும். அதன் பிறகு, 3 சாமிகளும் அங்கிருந்து புறப்பட்டு, குமரி மாவட்டம் வந்து சேரும். சுவாமிகள் புறப்படுதல் மற்றும் வருகையின்போது ஏராளமான பக்தர்கள் திரண்டு வரவேற்று வழிபடுவர்.
இந்த ஆண்டு நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக சுசீந்திரத்தில் இருந்து முன்னு தித்த நங்கை அம்மன் புறப்பட்டது. தமிழ்நாடு - கேரளா போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன் புறப்பட்ட முன்னு தித்த நங்கை அம்மனுக்கு வீதிகள் தோறும் பக்தர்கள் திரண்டு பரவசத்துடன் மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து முன்னு தித்த நங்கை அம்மன் மற்றும் வேளிமலை முருகனும் பக்தர்கள் புடை சூழ, பத்மநாபபுரம் அரண்மனையை வந்தடைந்தது.