சர்வதேச சுற்றுலாத் தளமான கன்னியாகுமரியில் பிரசித்திப் பெற்ற பகவதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இங்கு நவராத்திரி திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் நவராத்திரி திருவிழா கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. 10 நாள் நடைபெறும் திருவிழா, வருகிற 26ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்த 10 நாளில் முக்கிய நிகழ்ச்சியான பரிவேட்டை நிகழ்ச்சி மகாதானபுரத்தில் நடப்பது வழக்கம். இதற்காக கோயிலில் இருந்து அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி யானை, குதிரைகள் முன்செல்ல 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக சென்று மகாதானபுரத்தில் பானாசுரன் என்ற அரக்கனை வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டு கரோனா காரணமாக பரிவேட்டை நிகழ்ச்சி பத்தாம் நாள் திருவிழாவான 26ஆம் தேதி மாலை 6 மணிக்கு பகவதி அம்மன் கோயில் அருகாமையில் முதல் முறையாக மகாதானபுரத்திற்கு பதிலாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள ஈசான மூலையில் நடக்கிறது.
அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமரைபாரதி இந்த பரிவேட்டை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பரிவேட்டை நிகழ்ச்சி என்பது ஐதீக முறைப்படி தொன்றுதொட்டு நடைபெறும் நிகழ்வாகும்.
இதனால் கரோனா காரணமாக ஊர்வலத்தை வேண்டுமானால் ரத்து செய்துவிட்டு ஐதீக முறைப்படி கண்டிப்பாக பரிவேட்டை நிகழ்ச்சியை மகாதானபுரத்தில் நடத்த வேண்டும் என அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமரைபாரதி கூறுகையில், ''கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. பரிவேட்டைத் திருவிழா மகாதானபுரத்தில் நடைபெற மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது இப்பகுதியில் உள்ள லட்சக்கணக்கான பக்தர்களின் உணர்வு சம்பந்தப்பட்ட விசயம். ஆகவே அரசு உடனடியாக மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கண்ணீர் வரவழைத்த வெங்காய விலை; இறக்குமதிக்கு தளர்வளித்த மத்திய அரசு!