கன்னியாகுமரி - நெல்லை மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள கிராமம் லெவிஞ்சிபுரம். இந்த கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சேகர், அன்னப்பூ தம்பதியின் மகன் சரண். குமரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் சரண், நீளம் தாண்டுதல் விளையாட்டில் தொடர்ந்து பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட இவர், 21 வயதிற்கு உட்பட்டோருக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் 7.41 மீட்டர் தாண்டி சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இதனையடுத்து ஊர் திரும்பிய சரணிற்கு லெவிஞ்சிபுரம் கிராம மக்கள் ஒன்றிணைந்து பாராட்டு விழா நடத்தினர். இவ்விழாவில் வள்ளியூர் கோட்ட உதவி கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் தலைமை தாங்கினார். இதில் சரணுக்கு வெற்றிக் கோப்பை பரிசாக அளிக்கப்பட்டது. கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவருக்குப் பாராட்டு தெரிவித்தனர்.
தேசிய அளவில் தங்கம் வென்ற மாணவனுக்கு பொதுமக்கள் பாராட்டு விழா இதுகுறித்து உதவி கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் கூறுகையில், ' கிராமத்திலிருந்து மாணவன் ஒருவன் தேசிய அளவில் வெற்றி பெறுவது மிகப் பெரிய விஷயம். அதைவிட அவனை தங்கள் வீட்டுப் பிள்ளை போல், நினைத்து ஒட்டு மொத்த கிராமமே ஒன்றிணைந்து பாராட்டு விழா நடத்துவது மிகப்பெரிய விஷயம். இந்த மாணவன் பெற்ற வெற்றி, இந்தக் கிராமத்தில் இருக்கும் மற்ற மாணவர்களுக்கும் ஒரு உந்துதலாக அமைய வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:வங்கதேச பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் பயிற்சியாளர் தேர்வு