கன்னியாகுமரி: பூமியில் தோன்றிய மிக முக்கியமான அம்சமாக மரம், செடி கொடிகள் உள்ளன. இவை பச்சை நிறத்தை போர்வையாக பரந்து விரிந்து பூமியை பசுமையாக வைத்துள்ளது. மனிதனின் உதவி இல்லாமல் மரம், செடி மற்றும் கொடிகளால் வாழ முடியும். ஆனால், இவைகளின் உதவி இல்லாமல் எந்த ஒரு உயிரினமும் வாழ முடியாது.
ஆகையால்தான் மனிதனுக்கும், மரங்களுக்கும் இடையில் உள்ள தொடர்பு தாயும், குழந்தையும் போல பிண்ணி பிணைந்து உள்ளது. மனிதன் உயிர் வாழ பிராணவாயு எனப்படும் ஆக்ஸிஜன் அவசியம். குடிப்பதற்கு நீர் அவசியம். உண்பதற்கு உணவு அவசியம். வாழ்வதற்கு வாழ்விடங்கள் அவசியம். இந்த அவசியமான அனைத்தையும் வழங்குவது மரம் மற்றும் பல்வேறு வகையான செடி, கொடிகள். இவை மழை உருவாக காரணமாக உள்ளன.
இவை உண்பதற்கு தானியங்களையும், பழங்களையும், காய்கறிகளையும் தருகிறது. வாழ்விடங்களை அமைக்க மரங்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. பூமியின் மேற்பரப்பு வெப்பம் அடையாமல் இருக்க மரங்கள் முக்கிய பங்கு வகித்து வருகிறது. மரங்கள் இல்லாத பாலைவனம் மற்றும் பனி துருவங்களில் மனிதன் வாழ்வது இல்லை. ஆகையால் நாம் மரங்களை வளர்ப்பதால் அதிக வளமான நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
மனிதனுக்கு இறைவனால் வழங்கப்பட்ட வரம்தான் இந்த மரங்கள். இவை அதிக அளவில் நன்மைகளை வழங்குவதோடு, இந்த பூமியையும் அழிவில் இருந்து பாதுகாத்து வருகிறது. அப்படி நம்மை பாதுகாத்து வந்த மரங்கள் மற்றும் செடி, கொடிகளை பல்வேறு காரணங்களைக் கூறி அரசும், பொதுமக்களாகிய நாமும் அழித்து வருகிறோம். மரங்களின் அவசியத்தை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு அமைப்புகள் மரம் நட்டு விழிப்புணர்பு ஏற்படுத்தி வருகின்றன.