கன்னியாகுமரி: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் - முன்னுதித்த நங்கை அம்மன் கோயிலில் இருந்து அம்மன் விக்ரகம் மன்னர்கள் கால பாரம்பரிய முறைப்படி தமிழ்நாடு - கேரளா ஆகிய இரு மாநில காவல்துறையின் துப்பாக்கியேந்திய போலீசாரின் மரியாதையுடன் பேண்ட்வாத்தியங்கள் முழங்க முத்துக்குடைகளுடன் ஊர்வலமாக புறப்பட்டது. ஏரளமான பக்கதர்கள் சாமி தரிசனம் செய்து வழியனுப்பி வைத்தனர்.
நவராத்திரி விழா வரும் 26ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக மன்னர்கள் கால பாரம்பரிய முறைப்படி கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் மன்னரின் உடைவாளுடன் ஊர்வலமாக புறப்பட்டு திருவனந்தபுரம் செல்வது வழக்கம்.
அங்கு நடைபெறும் நவராத்திரி விழாவில் சாமி சிலைகளை வைத்து பூஜைகள் செய்வர். பத்து நாள்கள் விழா முடிந்ததும் மீண்டும் சாமி சிலைகள் குமரி மாவட்டத்திற்குக் கொண்டு வரப்படும்.
ஆனால், கடந்த இரு ஆண்டுகள் கரோனா காரணமாக பிரமாண்டமான ஊர்வலம் ரத்து செய்யப்பட்டு சமூக இடைவெளியுடன் எளிதான முறையில் சாமிசிலைகள் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன. இந்த ஆண்டு நவராத்திரி விழா வரும் 26ஆம் தேதி தொடங்குகிறது. அதனை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தில் உள்ள அருள்மிகு முன்னுதித்த நங்கை அம்மன் திருவனந்தபுரம் புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.