ஷாப்பிங் மாலுக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல் - நாகர்கோவில் மாநகராட்சி அலுவலர்கள்
கன்னியாகுமரி: கட்டடம் கட்ட முறையான அனுமதி பெறவில்லை எனக்கூறி நாகர்கோவிலில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு மாநகராட்சி சீல் வைத்து வருகிறது. இதுவரையிலும் 50க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் செட்டிக்குளம் சந்திப்பில் ஜாய் ராஜா என்பவருக்கு சொந்தமான ராஜாஸ் மால் உள்ளது. இதில் திரையரங்கு, ஷாப்பிங் சென்டர்கள் உள்ளன. இந்த ஷாப்பிங் மாலுக்கு கட்டடங்கள் கட்டுவதற்கு முறையான அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இதனை அடுத்து நாகர்கோவில் மாநகராட்சி அலுவலர்கள், மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தலைமையில் ஷாப்பிங் மாலுக்கு திடீரென வந்தனர். அனுமதி பெறாமல் கட்டப்பட்ட மாலுக்கு சீல் வைக்கப்போவதாக அவர்கள் அங்கு நோட்டீஸ் ஒட்டினார்கள்.
அதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலர்கள் ராஜாஸ் மாலுக்கு சீல் வைத்தனர். இதையொட்டி அங்கு பலத்த காவல் துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் நாகர்கோவில் செட்டிக்குளம் பகுதி சலசலப்பு நிலவியுள்ளது.