கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வடக்கு கோணம் பகுதியில் 65 ஏக்கர் சுற்றளவு கொண்ட நீர் பிடிப்புள்ள குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதியைச் சார்ந்த 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தாய் குளமான இக்குளத்துக்கு, சேய் குளமாக 5 கிளைக் குளங்களும் உள்ளன. அதற்கும் இங்கிருந்து தான் தண்ணீர் செல்கிறது.
கால்நடைகள் வந்து தண்ணீர் குடிப்பதும் இந்த குளத்தில் தான்.இந்த குளத்து நீரைப் பாசனத்திற்கு மட்டுமல்லாமல் குடிநீர் தேவைக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர் அப்பகுதி மக்கள். சமீப காலமாக அருகே உள்ள ராணித் தோட்டம் அரசுப் போக்குவரத்துப் பணிமனையில் இருந்து வரும் கழிவு நீர் மற்றும் கழிவு எண்ணெய்க் கால்வாய், இந்த குளத்தில் வந்து கலக்கிறது. இதனால் இந்தக் குளத்தின் நீர் பச்சை நிறமாக மாறி காட்சியளிப்பதுடன் , துர்நாற்றம் வீசி வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.