தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஸ்கூலுக்கு வேணாம்... வா கூட்டத்துக்கு போலாம்' - மாணவர்களைக் கடத்திய நாம் தமிழர் நிர்வாகி கைது! - abduction of Thazhakudy Govt school kids abducted

கன்னியாகுமரி: கண்டன ஆர்ப்பாட்டத்துக்காக ஏழு அரசு பள்ளி மாணவர்களை கடத்த முயன்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

Thazhakudy school students abduction
Thazhakudy school students abduction

By

Published : Feb 4, 2020, 9:37 AM IST

Updated : Feb 4, 2020, 10:03 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் தாழாக்குடி பகுதியில் அரசு தொடக்கப்பள்ளியும் அரசு மேல்நிலைப் பள்ளியும் அருகருகே அமைந்துள்ளன. இந்தப் பள்ளிக்கூடங்களில் அதே பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர்.

இந்நிலையில், சனி ஞாயிறு விடுமுறை தினங்கள் முடிந்து நேற்று வழக்கம்போல் பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, திடீரென அப்பள்ளி அருகே வேன் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சாலை ஓரமாக நடந்துசென்ற ஏழு மாணவர்களை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றிக் கடத்திச் சென்றனர்.

இதைப் பார்த்த சக மாணவர்கள் கூச்சலிட அங்கு கூடியிருந்த பொதுமக்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் தகவலளித்தனர். பள்ளி நிர்வாகம் பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்த வருகைப் பதிவை ஆய்வு செய்ததில், அதே பகுதியைச் சேர்ந்த சுதர்ஷன் (5ஆம் வகுப்பு), மாதேஷ் (4ஆம் வகுப்பு), கமலேஷ் (5ஆம் வகுப்பு), பிரின்ஸ் (4ஆம் வகுப்பு), ஹரிஷ்பாபு (9ஆம் வகுப்பு), சந்தோஷ் (6ஆம் வகுப்பு), மஜித் (3ஆம் வகுப்பு) ஆகிய ஏழு மாணவர்கள் வராமல் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கடத்தப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து கண்ணீருடன் கதறியபடி பள்ளி வந்த பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தங்கள் குழந்தைகளை மீட்கும் வரை பள்ளியைவிட்டு நகரமாட்டோம் எனக் கூறி பள்ளி வாயிற்கதவை அடைத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடத்தப்பட்ட மாணவர்களை காவல் துறை பள்ளியில் ஒப்படைப்பு

தகவல் அறிந்து பள்ளி சென்ற காவல் துறையினர் கடத்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பொதுமக்களோ மாணவர்களை மீட்டுத்தரும் வரை அங்கிருந்து நகரமாட்டோம் எனத் திட்டவட்டமாகக் கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதனிடையே, நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகப்படும்படியான வேன் ஒன்று வேகமாகச் செல்வதை அறிந்த ஆரல்வாய்மொழி காவல் துறையினர் அதனைத் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து, வேனை சோதனையிட்டதில் ஏழு பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

பின்னர், மாணவர்களை மீட்ட காவல் துறையினர் அவர்களின் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். மேலும், அவர்களைக் கடத்த முயன்ற தாழக்குடி பகுதியைச் சேர்ந்த ராகுல் என்பவரைக் கைதுசெய்து தீவிர விசாரணை நடத்தினார்.

விசாரணையில், அவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி என்பதும் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் 5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.

பள்ளி மாணவர்களை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்த காவல் துறையினர், கடத்த முயன்ற நபரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க : குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் 9 பேர் கைது!

Last Updated : Feb 4, 2020, 10:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details