கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்க தேர்தல் ஜுலை 7ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் அதிமுக , திமுக , கம்யூனிஸ்ட் , சுயேட்சை என நான்கு அணிகள் போட்டியிட்டன. மொத்தம் 1161 வாக்குகளில் 507 வாக்குகள் மட்டும் பாதிவாகி இருந்தது. இதையடுத்து வாக்குப்பதிவு சீட்டுகள் அடங்கிய பெட்டி கூட்டுறவு சங்க அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி முன்னாள் தலைவரும், சுயேட்சை வேட்பாளருமான மனாஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி ராமநாதன் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வந்தது.
இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 24ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், நேற்றுஇரவு அடையாளம் தெரியாத நபர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு நுழைந்து வாக்குப்பெட்டியை உடைத்து தீ வைத்தனர். இன்று காலையில் வழக்கம் போல் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு வந்த ஊழியர்கள் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அச்சமடைந்து உள்ளே சென்று பார்த்தப்போது வாக்கு சீட்டு எரிக்கப்பட்டு இருந்ததை கண்ட அதிர்ச்சியடைந்தனர்.
தீவைத்து எரிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் பின்னர் ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் மோப்பநாயுடன் வந்த காவல்துறையினர், சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.