குமரி மாவட்டம் நாகர்கோவில் ஜோஸ்வா தெருவை சேர்ந்த பெண் மருத்துவர் நதியா( 32). இவருக்கு அதே பகுதியில் உள்ள ஹமீது பாருக் (36) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் -மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நதியா தனது தகப்பனார் வீட்டில் 3 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று (அக்.29) மாலை நதியாவின் வீட்டுக்கு சென்ற ஹமீது பாருக், அவரின் தாயார் சாலிமா தகப்பனார் பீர் முகமது , தம்பி பீர் முகைதீன் ஆகிய நான்கு பேரும் ஹமீது பாருக்குடன் இணைந்து வாழுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனை நதியா ஏற்க மறுத்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஹமீது குடும்பத்தினர் நதியாவை அவதூறாக பேசி பெண் என்றும் பார்க்காமல் நதியாவை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த நதியாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் .
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து நதியா அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட வடசேரி மகளிர் காவல் துறையினர், ஹமீது பாருக் உட்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை...!