கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியிலுள்ள கேசவ திருப்பால்புரத்தை சேர்ந்தவர் கணேஷ் (39). இவர் வீடியோகிராபராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி (31). இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கணவனும் மனைவியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது, கணேஷ் கட்டிலில் இருந்து விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியதாக அவரது மனைவி கூறினார். இதைத் தொடர்ந்து உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு நினைவு திரும்பாமல் இருந்ததால் மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது.
இதையடுத்து கணேஷ் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து மீண்டு வந்தார். பின்னர் நினைவு திரும்பியதும், வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த தன்னை இருளில் யாரோ தாக்கியதாக அவர் காவல் துறையிடம் தெரிவித்தார்.
மேலும், அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவல் துறை கணேஷ் மனைவி காயத்ரியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணான தகவலை அளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயன்ற திடுக்கிடும் தகவலும் வெளியானது.
காயத்ரிக்கு மதுரையை சேர்ந்த யாசின் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. யாசின் குமரி மாவட்டம் நாகர்கோவில் செட்டிக்குளம் பகுதியில் ஜெராக்ஸ் மற்றும் மொபைல் கடை நடத்தி வந்துள்ளார். தவிர, யாசினுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக யாசினுடன் பல பகுதிகளுக்குக் காயத்ரி பயணித்துள்ளார்.
இந்நிலையில் நாகர்கோவில் பகுதியில் ப்ளே ஸ்கூல் ஆரம்பிக்க திட்டமிட்ட யாசினுக்கு, காயத்திரி தனது கணவன் பெயரில் உள்ள வீட்டு பத்திரத்தை, தனது சகோதரனுக்கு பணத்தேவை இருப்பதாக கூறி, தனியார் வங்கியில் சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்துள்ளார்.