நாகர்கோவில், திருவனந்தபுரம் ரயில் பாதையில் மழைக் காலங்களில் தண்டவாளத்தில் ஏற்படும் மண்சரிவைத் தடுக்க நிரந்தரத் தீர்வு காணும் வகையில் தடுப்பு சுவர்கள் கட்ட வேண்டும் என எம். பி வசந்தகுமார் ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடையும்போதெல்லாம் நாகர்கோவில், திருவனந்தபுரம் ரயில் பாதையில் இரணியல், பள்ளியாடி போன்ற பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு ரயில் போக்குவரத்து பாதிக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதேபோல், கடந்த எட்டாம் தேதி இரணியல் அருகே தெங்கன்குழி பகுதியில், மழை காரணமாக தண்டவாளத்தில் 60 அடி நீளத்திற்கு மண் சரிந்து விழுந்ததால் சரக்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இது போன்று ஒவ்வொரு முறையும் கன மழை ஏற்படும்போதெல்லாம் பள்ளியாடி, இரணியல் போன்ற பகுதிகளில் தொடர்ந்து மண் சரிவு ஏற்படுவதும், அதனால் ரயில் போக்குவரத்து தடைபடும் சூழ்நிலையும் தொடர்ந்து நிலவி வருகிறது.
எனவே ரயில் தண்டவாளத்தை ஒட்டியப் பகுதிகளில் இருபுறமும் தடுப்பு சுவர்கள் கட்டி மண்சரிவு ஏற்படாத வண்ணம் தடுக்க ரயில்வேத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற தடுப்பு சுவர்கள் கட்டுவதன் மூலம் மட்டுமே மண்சரிவைத் தடுக்க நிரந்தரத் தீர்வு காண முடியும். எனவே ரயில்வே துறை அலுவலர்கள் உடனடியாக இதில் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.