கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவருகிறது. தற்போதைய நிலவரப்படி நான்காயிரத்திற்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் அரசு அலுவலகங்களில் பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள், மோட்டார் தொழில் சார்ந்தவர்கள் அதிகளவில் வந்து செல்லும் இடமான வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி கனரக வாகனங்களுக்கான புதிய ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், எஃப்சி ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இருசக்கர வாகனங்களுக்கு தினசரி தலா 30 பேர்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரம் ஆன்லைன் மூலமாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதனடிப்படையில் மட்டுமே பணி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.