கன்னியாகுமரி: அஞ்சுகிராமம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர், ஏசு தாசன். இவரது மனைவி அனிட்டா (46). இவர்களுக்கு 19 வயதில் சகாய திவ்யா மற்றும் 16 வயதில் சகாய பூஜா மெளலியா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏசுதாசன் மரணம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் இரண்டு மகள்களையும் அனிட்டா தனியாக வளர்த்து வந்துள்ளார். சகாய திவ்யா அந்த பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.இ. இரண்டாம் ஆண்டும், இரண்டாம் மகள் சகாய பூஜா மௌலியா அழகப்பபுரத்தில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இன்று (ஆகஸ்ட் 10) அதிகாலையில் அனிட்டா வீட்டிற்கு அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் வந்துள்ளார். அப்போது அனிட்டாவின் வீட்டுக் கதவு பூட்டப்பட்டு இருந்துள்ளது. சிறிது நேரம் கழித்து மற்றொரு நபர் வந்த போதும் கதவு பூட்டப்பட்டு இருந்தது. வழக்கமாக காலையிலேயே அனிட்டாவின் வீட்டில் கதவு திறக்கப்பட்டு விடும். இன்று நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் அந்த பகுதியினரிடையே சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில், அப்பகுதி மக்கள் உடனே வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்து உள்ளனர். அப்போது அனிட்டா மற்றும் அவரது 2 மகள்களும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துள்ளனர். 3 பேரும் இறந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அஞ்சு கிராமம் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கடையநல்லூர் அருகே கிணற்றில் பிணமாக கிடந்த இளம்பெண்:போலீசார் விசாரணை
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் தொங்கிய அனிட்டா, சகாய திவ்யா, சகாய பூஜா மெளலியா ஆகிய 3 பேரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 2 மகள்களையும் தூக்கில் தொங்கவிட்டுக் கொன்று, அனிட்டா தற்கொலை செய்து இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் ஆய்வு செய்தபோது அனிட்டா எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் தனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் குழந்தைகளை சரிவர கவனிக்க முடியவில்லை என்றும், இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் குடும்பத்தோடு தற்கொலை செய்வதாகவும், எங்கள் சாவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை என்றும் எழுதியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
அந்த கடிதத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 3 பேர் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டும் வருகிறது. அனிட்டா, தனது கணவன் இறந்த பிறகு மகள்களை கஷ்டப்பட்டு படிக்க வைத்துள்ளார்.
குடும்பத்தில் பணப்பிரச்சனை காரணமாக அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்திலும் போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது. மகள்களைக் கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அஞ்சு கிராமம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:"குழந்தை எப்படி சிகப்பாக பிறக்கும்?" - காதல் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை!