கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டிபுரம் அருகே பிளவக்கல்விளை பகுதியைச் சேர்ந்தவர் வனஜா. இவரது மகள் வின்சி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மதன் என்பவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஆண்,பெண் என இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். வின்சி மற்றொரு திருமணம் செய்து கொண்டு நெல்லை மாவட்டம் திசையன் விளை பகுதியில் இரண்டாவது கணவனுடன் வாழ்ந்து வருகிறார். மேலும், முதல் கணவனுடன் மகளும், வின்சியுடன் மகனும் வசித்து வருகின்றனர்.
இதனையடுத்து மதனுடன் வசித்து வந்த வின்சியின் மகள் தனது பாட்டியான வனஜாவை பார்க்க வந்துள்ளார். ஆனால் தந்தை வீட்டிற்கு அவர் திரும்பி செல்லவில்லை. இதனால் மகளை அழைத்து செல்ல வந்த மதனுக்கும் வனஜாவின் மகன் வினுவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் மதன் காயமடைந்து பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தத் தகவல் அறிந்த மதனின் சகோதரர்கள் மணிகண்டன், சுதன், மற்றொரு மணிகண்டன் ஆகிய 3 பேரும் வனஜா வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டதோடு வினுவை அடித்துள்ளனர்.
மகனை அடிப்பதை பார்த்த வனஜா, அவர்களை தடுக்க சென்றபோது வனஜா மீதும் அடிவிழுந்துள்ளது. இதில் பலத்த காயம் ஏற்பட்ட வனஜா மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றபோது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவரது உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பூதப்பாண்டி காவல் துறையினர், மணிகண்டன், சுதன், மணிகண்டன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குடும்ப தகராறு: விலக்க முயன்ற மூதாட்டி கொலை