கன்னியாகுமரி கரும்பாட்டூர் தோவாலயம் முதல் பிடிஸ் சாலை வரையிலான சாலை 13 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருந்துவருகிறது. அதனால் அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அந்தச் சாலையை சீரமைத்துத் தருமாறு சம்பந்தபட்ட அலுவலர்களிடம் கோரிக்கை வைத்தனர். அதனையறிந்த சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின், மாவட்ட ஊரகவளர்ச்சித் துறை இயக்குநரை நேரில் சந்தித்து சாலையை சீரமைக்குமாறு கோரிக்கை வைத்தார். அதனடிப்படையில் சாலையை சீரமைக்க 15 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சாலை பணிகளை தாமதப்படுத்துவதாகக் கூறி மறியல்: எம்எல்ஏ உள்பட 15 பேர் கைது - சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின்
கன்னியாகுமரி: கரும்பாட்டூர் சாலை சீரமைப்பு பணிகளை தாமதப்படுத்துவதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்ட சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின் உள்பட 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சாலை பணிகளின் டெண்டர் முடிந்தும் சீரமைப்பு பணிகள் தொடங்குவதில் பல நாள்களாக தாமதம் ஏற்பட்டுவந்தது. அதையடுத்து சாலைப் பணிகள் இன்று தொடங்கவிருந்த நிலையில், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தான் வந்து பணியை தொடங்கி வைத்தப்பதாகவும், அதுவரை பணிகளைத் தொடங்க கூடாது எனவும் கூறி தாமதப்படுத்துவதாக கூறப்படுகிறது. அதனால் அதைக் கண்டித்தும், பணிகளை உடனே தொடங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின் தலைமையில் திமுகவினர் கரும்பாட்டூர் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவலறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர், சாலை மறியலைக் கைவிடுமாறு போராட்டக்காரர்களிடம் கேட்டுக்கொண்டனர். அதனை அவர்கள் ஏற்காததால் கன்னியாகுமரி எஸ்.பி. பாஸ்கரன் தலைமையிலான காவல்துறையினர், அவர்களைக் கைது செய்து குண்டுகட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றினர். அதைத்தொடர்ந்து ஒன்றிய செயலாளர் தாமரை பாரதி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.