கன்னியாகுமரி மாவட்டத்தில் தினமும் பத்துக்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை, தக்கலை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 100 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் கடந்த ஆண்டில் 16 ஆயிரத்து 812 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இதனைத் தொடர்ந்து கரோனா பரவலை தடுக்க சுகாதாரத் துறை அலுவலர்கள் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இதுவரை 50 ஆயிரம் டோஸ் கரோனா தடுப்பு மருந்துகள் வந்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், முன் களப்பணியாளர்கள் என 11 ஆயிரத்து 931 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவர்களில் 4 ஆயிரத்து 526 பேருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.