கன்னியாகுமரி:கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 16ஆம் தேதி தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக குமரி மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் தற்போது காரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் என முன்களப் பணியாளர்கள் கரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வடிவீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
காவலர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் இந்நிலையில், நாகர்கோவிலில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவருடன் அங்கிருந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்களும் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டனர்.
இதுகுறித்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கூறுகையில், "கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது பாதுகாப்பானது. நீங்கள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இத்தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம். மேலும், உங்களது நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி நீங்கள் வலியுறுத்த வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:ஈரோட்டில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம்!