கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கடந்த நாற்பது நாட்களுக்கு முன்பு மணிகண்டன், வேல் தாஸ் ஆகிய நபர்கள் வந்தனர். அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பெண்களை சந்தித்து எல்.இ.டி பல்ப் தயாரிப்பதற்கு சிறு தொழில் கடன் தருவதாகவும் அதன் மூலம் பல லட்சம் ரூபாய் வரை சம்பதிக்கலாம் எனவும் ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.
கடன் தருவதாக கூறி பெண்களிடம் பண மோசடி செய்த ஆசாமிகள் - பெண்கள் சிறு தொழில் தொடங்க கடன்
கன்னியாகுமரி: சிறு தொழில் தொடங்க கடன் தருவதாகக் கூறி 50 லட்சம் ரூபாய்க்கு மேல், மோசடி செய்த நபர்களை கைது செய்யுமாறு பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
இதற்காக நாகர்கோவில் அடுத்துள்ள பார்வதிபுரத்தில் அலுவலகம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. மேலும், கிராமப்புற பெண்களை தங்கள் அறக்கட்டளையின் கீழ் இணைக்குமாறு பெண்கள் சிலருக்கு அறிவுறுத்தியதோடு ஒரு நபருக்கு 650 ரூபாய் வீதம் வசூல் செய்யுமாறும் கூறியுள்ளனர். இதை நம்பிய அவர்கள் 250க்கும் மேற்பட்ட குழுக்களை உருவாக்கி 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை அதில் இணைத்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர்களிடமிருந்து 50 லட்ச ரூபாய்க்கு மேல் வசூலித்து மணிகண்டன், வேல் தாஸிடம் ஒப்படைத்துள்ளனர்.
பின்னர் கடன் வாங்கும் பொருட்டு குழுவில் இணைந்த பெண்கள் பார்வதிபுரம் சென்றபோது, அலுவலகம் மூடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பெண்கள் மணிகண்டன், வேல் தாஸ் ஆகியோரை கைப்பேசியில் தொடர்புகொள்ள முயற்சித்தனர். ஆனால் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்து. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் தாங்கள் ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்தனர். உடனே இது குறித்து நேற்று (மார்ச் 3) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்த அவர்கள் பணத்தை மீட்டு தருமாறு வலியுறுத்தினர்.