தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாஜக, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் பரப்புரை செய்வதற்காக பிரதமர் மோடி நாளை (ஏப்.2) மாலை 2 மணிக்கு கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார். அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடும் எம்.ஆர்.காந்தி, குளச்சல் தொகுதி ரமேஷ், விளவங்கோடு தொகுதி ஜெயசீலன், கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம், பத்மநாபபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான் தங்கம், கிள்ளியூர் தொகுதி தா.ம.க வேட்பாளர் ஜுட்தேவ் ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி பேசுகிறார்.
திருநெல்வேலி, தூத்துக்குடியில் இருந்தும் பாஜக, அதிமுக வேட்பாளர்கள் மோடி பரப்புரையில் கலந்துகொள்ள உள்ளனர். மோடி வருகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பரப்புரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரிக்கு வருகிறார்.