கன்னியாகுமரி: நாகர்கோவிலில் மாநகராட்சியின் புதிய அலுவலக கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில், நகராட்சியாக இருந்து வந்த நாகர்கோவில் அண்மையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்கு என புதிய கட்டடம் கட்ட முடிவெடுக்கப்பட்டு புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.
இதனிடையே, நாகர்கோவிலில் இருந்த அண்ணா விளையாட்டு அரங்க வளாகத்தில் இருந்த கலைவாணர் அரங்கை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக, புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டுவதற்கு என சுமார் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் இருந்த கலைவாணர் அரங்கம் இருந்த இடத்தில் அதை இடித்து அகற்றிவிட்டு, புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டும் பணி நடந்தது. தற்பொழுது புதிய அலுவலக கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து உள்ளது. 2 தளங்களுடன் பிரமிக்கும் வகையில் மாநகராட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. கூட்ட அரங்கம், லிஃப்ட் வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த புதிய மாநகராட்சி அலுவலகம் திறப்பு விழா இன்று (மார்ச்.7) நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மாநகராட்சியில் புதிதாக அமைய உள்ள பேருந்து நிலைய மாதிரி வடிவமைப்பை பார்வையிட்டார். பின்னர் 52 வார்டு உறுப்பினர்களையும், நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என். நேரு, மனோ தங்கராஜ், மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.