கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள ஆவின் பாலகங்களில், அமைச்சர் சா.மு. நாசர் இன்று காலை (மே.30) ஆய்வில் ஈடுபட்டார். குறைக்கப்பட்ட விலையில் பால் விற்பனை நடைபெறுகிறதாக என்பது குறித்து கேட்டறிந்தார்.
வாடிக்கையாளர்களிடம் கேட்டறிந்த அமைச்சர்
ஆவின் விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்த அமைச்சர், அங்கு பால் வாங்க வந்த வாடிக்கையாளர்களிடம், 'என்ன விலைக்கு பால் விற்பனை செய்யப்படுகிறது' என்பது குறித்தும் கேட்டு தெரிந்துகொண்டார்.
ஆவின் பால் பண்ணையில் ஆய்வு
நாகர்கோவில் ஆவின் பால் பண்ணையில் நடைபெறும் பால் விநியோகப் பணிகள், பதப்படுத்தும் பணிகள் உள்ளிட்டவற்றையும் அமைச்சர் சா.மு. நாசர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அமைச்சர் சா.மு. நாசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:'கரோனா தொற்று சங்கிலித் தொடரை துண்டிப்பதற்காக முதலமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள் என அனைவரும் அரும்பணியாற்றி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, தற்போதைய காலகட்டத்தில் பொதுமக்களுக்கு முறையாக அத்தியாவசியப் பொருள்கள் போன்றவை கிடைக்கிறதா என தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்து வருகிறோம்.
13 கடைகளுக்குச் சீல்
தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு பால் உற்பத்தி 36 லட்சம் லிட்டரில் இருந்து 39 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளதோடு, விற்பனையும் மூன்று லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது. முதலமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து, பால் விலை குறைக்கப்பட்ட பின்னரும், அதிக விலைக்கு விற்பதாக 13 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அதிக விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அமைச்சர் சா.மு.நாசர் பேட்டி கடும் நடவடிக்கை
ஆவின் பால் பண்ணையில் ஏதேனும் அலுவலர்கள் வருமான இழப்பை ஏற்படுத்தி இருந்தால், பழைய ஆவணங்களை ஆய்வு செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.