கன்னியாகுமரி:இரணியல் வேணாட்டு அரசர்கள் அரண்மனை, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. தற்போது இங்கு அரசு சார்பில் மூன்று கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பில் மறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மறுசீரமைப்புப் பணிகள் குறித்து நேற்று (ஜூன் 28) நேரில் ஆய்வுசெய்தார். அப்போது அவர் பேசுகையில், “குமரி மாவட்டம் இரணியலில் அமைந்துள்ள இந்த அரண்மனை கிபி 12ஆம் நூற்றாண்டிலிருந்து வேணாட்டு அரசர்களால் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவந்ததாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.
இது தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த அரண்மனையாகக் கருதப்படுகிறது. ஆனால், நீண்ட காலமாகப் பராமரிக்கப்படாத காரணத்தால், அரண்மனை இப்போது பொலிவிழந்து காணப்படுகிறது. எனவே, இந்த அரண்மனையை மறுசீரமைத்து தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த அரண்மனையாக மீட்டெடுக்கும் முயற்சியில் அரசு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் இரணியல் அரண்மனையைச் சீரமைப்பதற்காகத் தமிழ்நாடு அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் பணியினைத் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனை குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் என்னிடமும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கவனத்திற்கும் கொண்டுவந்தார்.