கன்னியாகுமரி:குமரியில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோயிலில் இன்று தைத்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் , “அறநிலையத்துறை குறித்து பாஜகவினருக்கு நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாத கனவு. அவர்களுக்கு உறுத்தலாக இருக்கும், ஏனென்றால் தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்து கோயில்களின் சுமார் 1 லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் மதத்தின் பெயரால் ஆக்கிரமிக்கப்பட்டு அதனை மீட்டு எடுத்துள்ளோம். இன்னும் பல ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட உள்ளன அதனை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அறநிலையத்துறையின் நோக்கம் என்னவென்று தெரியாதவர்கள் இது குறித்துப் பேசி வருகின்றனர். பாரதிய ஜனதா கட்சி எப்போதும் உண்மை பேசியது கிடையாது. அறநிலையத்துறை குறித்து பாரதிய ஜனதா கட்சியினர் பேச்சு வெற்று பேச்சு. பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில் அறநிலையத் துறையிடம் இருந்து கோயில்களை விடுவிக்கத் தயாரா..? ஈரோடு இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்டாலும் அவர்களுக்கு எந்த பலனும் இல்லை என்று உண்மையைப் பேசியுள்ளார் அண்ணாமலை. அவர்கள் போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்கமுடியாது.