கன்னியாகுமரி, திருமலை திருப்பதி கோயிலில் இன்னும் 15 நாள்களில் லட்டுப் பிரசாதம் வழங்க, திருமலை தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருவதாக, சென்னை திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் கமிட்டித் தலைவர் சேகர்ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:
'திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருப்பதி கோயிலில், கடந்தாண்டு மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. முதலாம் ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு நேற்று வருஷாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. சுவாமிக்கு அனைத்து பூஜைகளும் அபிஷேகங்களும் நடத்தப்பட்டன.
இங்கு வரும் அனைத்து பக்தர்களும் லட்டு பிரசாதம் எப்போது வழங்கப்படும் என்று கேட்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயிலுக்கு வந்த திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர், இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
முதல் கட்டமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் லட்டு பிரசாதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 15 நாள்களில் லட்டு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு லட்டு 50 ரூபாய்க்கு வழங்கப்படும். தற்போது இந்தக் கோயிலுக்கு தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். இன்னும் ஒரு ஆண்டில் 25 ஆயிரம் பக்தர்கள் வரவாய்ப்புள்ளது.
அதற்கு திருப்பதி தேவஸ்தானம் முயற்சி எடுத்து வருகிறது. கன்னியாகுமரிக்கு வரும் பக்தர்கள், குமரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் திருமலை திருப்பதி கோயிலுக்கும் வருவதற்கு இலவசப் பேருந்து வசதி செய்வதற்கு தேவஸ்தானம் முயற்சி எடுத்து வருகிறது.
மாதம் தோறும் சுவாமி கல்யாணம் நடத்தப்படும். மேலும், இங்கு திருமணங்கள் நடத்துவதற்கு திருமணமண்டபம் அமைக்க, இடம் தருவதற்கு விவேகானந்தா கேந்திரா நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. திருப்பதி கோயில் குறித்து மத்திய, மாநில சுற்றுலாத்துறையின் வரைபடத்தில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கன்னியாகுமரியில் பல இடங்களில் கோயில் பூஜை தொடர்பான விவரங்கள் கொண்ட வழிகாட்டிப் பலகை, விளம்பரப் பலகை, அறிவிப்புப் பலகைகள் அமைக்க கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகத்திடம் கடிதம் கொடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வைகுண்ட ஏகாதசி: 10 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி மும்முரம்