தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசன சட்டத்தை மாற்றி வருகிறது பாஜக - பாலகிருஷ்ணன் - admk bjp

பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசன சட்டத்தை மாற்றி வருகிறது பாஜக!- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசன சட்டத்தை மாற்றி வருகிறது பாஜக!- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

By

Published : Jun 26, 2023, 7:19 AM IST

Updated : Jun 26, 2023, 8:28 AM IST

அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசன சட்டத்தை மாற்றி வருகிறது பாஜக - பாலகிருஷ்ணன்

கன்னியாகுமரி:தக்கலையில் பெண்ணுரிமை பாதுகாப்பு மாநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று (ஜூன் 25) நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் நாகர்கோவிலுக்கு வருகை தந்தார்.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாலகிருஷ்ணன், ''பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் குழந்தைத் திருமணம் அதிகரித்து வருகிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே நீதி கிடைக்க வேண்டும். இருவரும் சமமாக இருக்க வேண்டும். பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன.

பெண்ணுரிமை:கிராமப்புறங்களில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலமாக ஏராளமான பெண்கள் பயனடைந்து வந்தனர். தற்போது பாஜக அரசு அதற்கான நிதியைக் குறைத்துள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்தில் 30 நாட்கள் மட்டுமே வேலை நடந்து வருகிறது.

4000 கோடி ரூபாய் சம்பள பாக்கி உள்ளது. ஆண்கள் சேமிக்கும் சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது. இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சுந்தரகாண்டம், ராமாயணம், மகாபாரதத்தைப் படித்தால் சுகப்பிரசவம் நடக்கும் என்று கூறியுள்ளார். இது வேடிக்கையாக உள்ளது. அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனச் சட்டத்தை மாற்றி வருகிறார்கள்.

சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை 15 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ளாட்சிகளில் 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்க ஒன்று தான்.

ஆனால், மேயர் மற்றும் பேரூராட்சித் தலைவர்களாக பெண்கள் இருந்தாலும் அவர்களை முன்னிலையில் வைத்து விட்டு ஆண்கள் தான், அதைச் செயல்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை அதிகரித்து உள்ளது. 2020-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மாநில அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். குழந்தைகள் திருமணத்தைத் தடுக்க 1986-ல் சட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது சிதம்பரத்தில் தீட்சிசர் ஒருவர் குழந்தை திருமண விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக ஆளுநர் ரவி பேசியுள்ளது வேடிக்கையாக உள்ளது. தானும் குழந்தைத் திருமணம் செய்து கொண்டதாக பகிரங்கமாகப் பேசியுள்ளார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநர் ரவி எல்லை தாண்டி பேசி வருகிறார்.

பாஜகவினரால் ஏற்படும் பாதிப்பு:தமிழகத்தில் பாரதிய ஜனதாவின் அஜெண்டாவை உருவாக்குபவராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் ஆளுநர் ரவி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரகடனமாக செயல்படுகிறார். பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பா.ஜனதா விமர்சித்து வருகிறது. இதன் மூலமாக அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள நடுக்கம் வெளியே தெரியத் தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும்போது மாறுபட்ட கருத்துகள் இருக்கத்தான் செய்யும்.

தமிழகத்தில் கூட அ.தி.மு.க. கூட்டணியில் பாரதிய ஜனதா உள்ளது. ஆனால், அண்ணாமலையைத் தலைவராக்கினால் கூட்டணி சேரமாட்டோம் என்று கூறியுள்ளார்கள். விலைவாசி உயர்ந்துள்ளது, அதற்கு அடிப்படை காரணம் பாரதிய ஜனதா அரசின் பொருளாதார கொள்கை தான். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் வரி உயர்வு காரணமாகும். மின் கட்டணத்தை தற்போது 25 சதவீதம் உயர்த்துவதாக கூறியுள்ளார்கள். மனிதர்களை இரவு நிம்மதியாக தூங்கவிடாமல் ஆப்பு வைக்கும் செயலில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது.

அமலாக்கத்துறை செயல்பாடு:தொழிலாளர் நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு சட்டத் திருத்தம் கொண்டு வந்ததும் பாரதிய ஜனதா அரசு தான். தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான புகாரை விசாரிக்க வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூறவில்லை. செந்தில் பாலாஜி அமைச்சராக உள்ளார். அவரை விசாரிக்க சில விதிமுறைகள் உள்ளன. அதை மீறி அமலாக்கத்துறை செயல்பட்டுள்ளது. சம்மன் அனுப்பி அவரை விசாரித்து இருக்கலாம்.

அமலாக்கத் துறை மூலமாக எதிர்க்கட்சியினரை பாரதிய ஜனதா மிரட்டி வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன் பேசினார்.

இந்தப் பேட்டியின்போது கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக் குழு உருப்பினர் வாசுகி, மாவட்டச் செயலாளர் செல்லசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:‘அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோதமாக சிறை பிடிக்கவில்லை' - அமலாக்கத்துறை விளக்கம்!

Last Updated : Jun 26, 2023, 8:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details