டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தியும் பாத யாத்திரை நடத்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ரெட் ஸ்டார் கட்சி சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு காவல் துறை தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை என அறியமுடிகிறது.
இதனையடுத்து, நாகர்கோவிலில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று (டிச.16) மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ரெட் ஸ்டார் கட்சியினர் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்ய முற்பட்டனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வேளாண் சட்டங்களை எதிர்த்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மா.லெ ரெட் ஸ்டார் கட்சியினர்! இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "அதானிகளுக்கும் அம்பானிகளுக்குமான வேளாண் திருத்த சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதை தவிர வேறு எதனையும் ஏற்க மாட்டோம் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. மோடியின் ஆட்சியில் சீர்திருத்தங்கள் மூலம் கொள்ளையடிக்கப்படுகிறது. எனவேதான், அது ஜனநாயகத்திலிருந்து விடுபட நினைக்கிறது.
ஏழை விவசாயிகளின் அடிப்படை உரிமைகளை மோடி அரசு பறிக்கிறது. மோடி அரசு விவசாயிகளுக்கு எதிரான கறுப்புச் சட்டங்களைக் கொண்டுவந்தது. பின்னர் அதனை எதிக்கும் விவசாயிகளை படை பலம் கொண்டு அடக்கப்பார்த்தது. லத்தி அடிகளால் சித்ரவதை செய்தது. விவசாயிகள் குரல் எழுப்பும்போது அது நாடு முழுவதும் எதிரொலிக்கும். வேளாண் திருத்த சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும்" என்றனர்.
இதையும் படிங்க :கைலாசாவுக்கு 3 நாட்கள் இலவச விசா - நித்யானந்தாவின் அதிரடி அறிவிப்பு