டிசம்பர் 24, 1892ல் விவேகானந்தர் கன்னியாகுமரி வந்தடைந்தபோது, குமரிக்கரையிலிருந்து கடலுக்குள்ளே 500 மீட்டர் தூரத்தில் அமைந்திருந்த இரு பாறைகளாலான இடத்திற்கு நீந்திச் சென்று மூன்று நாட்கள் தியானம் செய்துள்ளார். அவ்விடமே பிற்காலத்தில் விவேகானந்தர் பாறை என்றானது.
விவேகானந்தரின் நூறாவது ஆண்டான 1963ஆம் ஆண்டு, இந்திய அரசு அவருக்காக ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்புவதென்று முடிவானபோது கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தர் பாறையில் அவரின் நினைவு மண்டபம் கட்டுவதென்பது உறுதி செய்யப்பட்டது.
விவேகானந்தர் நினைவுப் பாறை கூடவே கரையிலிருந்து இப்பாறைக்குச் செல்ல பாலமொன்றை கட்டுவதென்பதும் சேர்த்துக்கொள்ளப்பட்டது. 1962ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்ட இம்மண்டபம் 1970ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விவேகானந்தர் பாறையை நிறுவிய ஏக்நான் ரானடே, அதனருகே திருவள்ளுவர் சிலையை நிறுவும் திட்டத்துக்கான வரைபடம் மற்றும் மதிப்பீட்டை அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதியிடம் வழங்கினார். 133 அடி மொத்த உயரமும், 2500 டன் மொத்த எடையும் கொண்ட இச்சிலையை பல கட்ட சவால்களுக்குப் பிறகு 2000ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அன்றைய முதலமைச்சர் கருணாநிதி திறந்துவைத்தார்.
இச்சூழலில், கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு பாறையையும் திருவள்ளுவர் சிலை பாறையையும் இணைக்கும் 140 மீட்டர் நீளம் கொண்ட கடல்சார் பாலம், 37 கோடி ரூபாய் செலவில் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும், சாகர்மாலா திட்டத்தின் கீழ் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக ரூ.317 கோடி ஒதுக்கீடு - ஸ்டாலின்