திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று, நெல்லை மாநகர் பகுதிகளில் நாள் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. மாவட்டத்தின் பிரதான அணைகள் நிரம்பி தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரித்திருந்தது. இந்நிலையில் இன்று, நெல்லை மாவட்டம் ஆரோக்கியநாதபுரத்தில் மரம் முறிந்து விழுந்ததில் கூலி தொழிலாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் கனமழை: மரம் முறிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளி உயிரிழப்பு! - Mercenary killed in tree fall
திருநெல்வேலி: ஆரோக்கியநாதபுரத்தில் மரம் முறிந்து விழுந்ததில் கூலி தொழிலாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![நெல்லையில் கனமழை: மரம் முறிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளி உயிரிழப்பு! நெல்லை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10204516-thumbnail-3x2-faf.jpg)
நெல்லை சுத்தமல்லி அடுத்த பழவூர் பகுதியை சேர்ந்த கொம்பையா, கனி ஆகிய இருவரும் செய்துங்கநல்லூரில் உள்ள ஒரு பேக்கரியில் பணிபுரிந்தனர். இவர்கள் பணியை முடித்துவிட்டு வழக்கம்போல் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுகொண்டிருக்கையில், மரம் திடீரென முறிந்து விழுந்ததில் சிக்கி கொண்டனர். உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை பார்த்த மக்கள், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.
ஆனால், தீயணைப்பு துறையினர் வருவதற்குள், கொம்பையா பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த கனி, சிகிச்சைக்காக நெல்லை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மர கிளைகளை அப்புறப்படுத்தும் பணியில் தற்போது தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்