கன்னியாகுமரி சகாயதெருவைச் சேர்ந்த தம்பதியினர் வசந்தன்-சிந்துஜா. இந்நிலையில் வசந்தன் கன்னியாகுமரி காவல் நிலையத்தில், தனது மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவிலிருந்த இளைஞர், தனது மனைவியை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டதாகப் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ளப் புகாரில், தனது மனைவி சிந்துஜாவிற்கும், கன்னியாகுமரியைச் சேர்ந்த மகேஷ் இளங்கோ என்ற இளைஞருக்கும் தொலைபேசி வாயிலாக ஏற்பட்ட நட்பு, தீவிரமாகி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதனைப் பயன்படுத்தி மகேஷ் இளங்கோ தனது மனைவியிடம் சிறுக சிறுகப் பணம் பறித்து வந்துள்ளார். மேலும் அந்த இளைஞர் இதுவரை 10 லட்சம் ரூபாய் வரை பணத்தை வாங்கியுள்ளார்.
இதையடுத்து தனது மனைவி, அந்த இளைஞரிடம் பணத்தை திருப்பிக் கேட்டபோது, இருவரும் அடிக்கடி நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வெளியிடப்போவதாகக் கூறி மிரட்டி இருக்கிறார். எனவே, மகேஷ் இளங்கோவிடமிருந்து பணத்தைப் பெற்றுத் தருமாறு அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கன்னியாகுமரி காவல் துறையினர், தலைமறைவாக உள்ள மகேஷ் இளங்கோவை வலைவீசித் தேடிவருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் காசி என்ற இளைஞர் பல பெண்களை ஏமாற்றி, அவர்களுடன் தனிமையிலிருந்த காணொலியைக்காட்டி மிரட்டி, பண மோசடியில் ஈடுபட்ட நிலையில், தற்போது சிபிசிஐடி காவல் துறையினர் அவரை விசாரித்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், மீண்டும் அதே போல ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.