தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கன்னியாகுமரி சிறப்பு தனிப்படையினரின் அதிரடி தேடுதல் வேட்டை.. 1,500 ரவுடிகளை பிடிக்க பட்டியல் தயார்! - கன்னியாகுமரி காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன்

Kanniyakumari special force: கன்னியாகுமரியில் கொலை, கொள்ளை போன்ற குற்ற வழக்குகளில் தலைமறைவாகி உள்ள ரவுடிகளை பிடிக்க சிறப்பு தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நியமித்து உள்ளார். இந்த தனிப்படை தேடுதல் வேட்டையில் பல முக்கிய ரவுடிகள் சிக்கி உள்ளனர்.

Kanniyakumari special force
கன்னியாகுமரி சிறப்பு தனிப்படையினரின் அதிரடி தேடுதல் வேட்டையில் முக்கிய ரவுடிகள் கைது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 12:05 PM IST

கன்னியாகுமரி:கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 25,000க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற கொடூரச் செயல்களில் ஈடுபட்ட நபர்கள் பலர் காவல் துறையினரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

இதே போன்று நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று 8 முதல் 15 ஆண்டுகள் வரை நீதிபதி முன் ஆஜராகாமல் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி 1,500 குற்றவாளிகள் காவல் துறையினரின் கைகளில் சிக்காமல் தப்பி வருவதாக தெரிய வருகிறது.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்ட ஒழுங்கு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளை உடனடியாக பிடித்து சிறையில் அடைக்க முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் ஜாமீன் பெற்று தலைமறைவாகி உள்ள ரவுடிகள், பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாமலும், காவல் துறையினரிடம் சிக்காமல் இருக்கும் ரவுடிகளை பிடித்து தண்டனை வாங்கிக் கொடுக்க அறிவுறுத்தியதாக காவல் துறை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகரன் பிரசாத் ரவுடிகளைப் பிடிக்க துணைக்காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உள்பட 20க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் அனுபவமிக்க காவல் துறையினரைக் கொண்டு தனிப்படை உருவாக்கினார்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகரன் பிரசாத் கூறுகையில், ‘கன்னியாகுமரி மாவட்டத்தில் நீதிமன்ற பிணை பெற்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகளை காவல் துறையினர் தேடி வந்த நிலையில், தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு கூட்டத்தில் தலைமறைவான ரவுடிகளைப் பிடிக்க உத்தரவிட்டதன்படி, தனி சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் முதல் கட்டமாக 1,500 ரவுடிகளை பிடிக்க பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. பழைய வழக்குகளை அலசி ஆராய்ந்தபோது 2,000 குற்றவாளிகள் போலீசாரின் பிடியில் இருந்தும், நீதிமன்றத்தில் தண்டனை பெறாமலும், ஜாமீன் பெற்று தலைமறைவாக உள்ளதும் தெரிய வந்தது. இதனை அடுத்து சிறப்பு படைகள் உருவாக்கப்பட்டு, 10 முதல் 15 ஆண்டுகள் என காவல் துறையினரின் பிடியில் சிக்காமல் இருந்த ரவுடிகள் பிடிபட்டு உள்ளனர்.

மேலும், தலைமறைவான ரவுடிகளைப் பிடிக்க தனிப்படை போலீசார் முழு முயற்சி எடுத்து வருகின்றனர். இந்த தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னரும் ரவுடிகள் சிக்கவில்லை என்றால், நீதிமன்றத்தின் அனுமதி பெற்று ரவுடிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

போலீசாரின் அதிரடி வேட்டை காரணமாக 10 கொலைகளில் சம்பந்தப்பட்ட ரவுடிகள் கூட கடந்த இரண்டு நாட்களில் கைது செய்யப்பட்டு உள்ளனர். போலீசாரின் தேடுதல் வேட்டை தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும்’ என்றார்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகரன் பிரசாத், ராமநாதபுரம் கடலோர காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு, கரூர் காவல் கண்காணிப்பாளராக இருந்த சுந்தரவதனம் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கபட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:“திமுக, காங்கிரஸ் மதவாத அரசியலை செய்து வருகிறது” - வேலூர் இப்ராஹிம்

ABOUT THE AUTHOR

...view details