திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோது மத்திய உரத்துறை அமைச்சராக அவரது மூத்த மகன் மு.க. அழகிரி பதவி வகித்தார். பின்நாட்களில் கட்சியில் யாரையும் மதிப்பதில்லை, கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்படுகிறார் என்ற காரணங்களுக்காக இவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
எனினும் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு கட்சியில் தன்னை சேர்த்துக் கொள்ளும்படி அழகிரி நேரடியாகவும் மறைமுகமாகவும் தூதுவிட்டார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்கபடவில்லை. இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் கட்சியை விரிவுபடுத்தும் நோக்கில் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கும் முறையை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் ஆன்லைன் வழியாக திமுகவில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் முன்னாள் திமுக பேரூர் செயலாளராக இருந்தவர் கபிலன். அழகிரியின் தீவிர விசுவாசியான இவர், திமுக ஆன்லைன் சேர்க்கையில் அழகிரி பெயரில் உறுப்பினர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்துள்ளார். இவர் ஆன்லைன் மூலமாக அழகிரி பெயருக்கு திமுக உறுப்பினர் அட்டை கேட்டதும் அழகிரியின் புகைப்படத்துடன் கூடிய திமுக உறுப்பினர் அட்டை கிடைத்துள்ளது. இதை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் அது வைரலாகி வருகிறது.