மத்திய அரசு ஜனவரி 31ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில் எல்ஐசியின் பங்குகளை விற்று நிதி திரட்டப்படும் என அறிவித்திருந்தது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் எல்ஐசியில் பணியாற்றும் ஊழியர்கள், எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவைத் திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக நாமக்கல் எல்ஐசி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஒரு மணி நேரம் பணியைப் புறக்கணித்து அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எல்ஐசியின் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவை கைவிட வேண்டும், தொடர்ந்து எல்ஐசி அரசின் கட்டுப்பாட்டிலேயே செயல்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
நாமக்கல், தஞ்சை, கன்னியாகுமரி எல்ஐசி ஊழியர்கள் போராட்டம் அதேபோல், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை எல்ஐசி வளாகத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஊழியர்கள், முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் மத்திய அரசுக்கு எதிராகவும் எல்ஐசியை பாதுகாக்கவும் வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், எல்ஐசி வளாகத்தில் ஊழியர்கள் ஒரு மணி நேரம் அலுவலக புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் எல்ஐசி நிறுவனத்தை தனியார்மயமாக்குவதும், பங்குகளை விற்க முயற்சிசெய்வதும் கண்டனத்திற்குரியது எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க...
5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - செங்கோட்டையன் அறிவிப்பு