கொரானா தொற்றுநோயின் தீவிரத்தால், ஈரானிலிருந்து வெளியேற முடியாமல் கன்னியாக்குமரி மீனவர்கள் தவிக்கின்றனர். இந்த மீனவர்களை மீட்கக் கோரி குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர், மத்திய, மாநில அரசுகளிடம் மனு அளித்துள்ளனர். இருப்பினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை சார்பில், நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், ஈரான் நாட்டில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்கக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஈரானில் தவிக்கும் மீனவர்களை மீட்கக் கோரி ஆர்ப்பாட்டம் இந்தப் போராட்டக் களத்தில் பெண்கள் கூறியதாவது: கொரானா தொற்றுநோய் பரவுவதன் காரணமாக, ஈரான் நாட்டில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உணவு, மருத்துவம் போன்ற எதுவும் கிடைக்காமலிருக்கிறது. அவர்களும், நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தில் உள்ளனர். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளிடம் எத்தனையோ முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு, உடனடியாக ஈரானில் சிக்கித் தவிக்கும் 700க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்க வேண்டும், என்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் நிலப்பத்திரங்கள் எந்த அளவிற்குக் கணினிமயமாக்கப்பட்டுள்ளது? - வைகோ கேள்வி