கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பேரூராட்சிக்கு உள்பட்ட வெள்ளச்சிவிளையில் கேப் சிட்டி இன்ஸ்டியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் நர்சிங் படிக்கும் மாணவிகள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் டிசம்பர் 31ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அதில், ”திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் கேப் சிட்டி இன்ஸ்டியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் விடுதியில் தங்கி நர்சிங் பயின்றுவருகிறோம்.
இக்கல்லூரியின் தாளாளர் ஆன்றோ செல்வகுமார் உரிய அங்கீகாரம் பெறாத தனது கல்லூரியில், போலி இடைத்தரகர்கள் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடத்தியுள்ளார். இலவச படிப்பு எனத் தெரிவித்துவிட்டு, ஆண்டிற்கு முப்பதாயிரம் வரை வசூலித்தார்.
கல்லூரி சேர்க்கையின்போது எங்களது பள்ளி அசல் சான்றிதழை பெற்றுக்கொண்டனர். இங்கு உணவு, கழிவறை போன்ற அடிப்படை வசதி ஏதும் இல்லை. மிகச் சிறிய அறையில் 100 பேருக்கு மேல் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கல்லூரியில் ஆய்வகம் வசதியும் இல்லை. அதுமட்டுமின்றி இங்கு மாணவிகளுக்கு பாதுகாப்பில்லை. கல்லூரியின் தாளாளர் அடிக்கடி மாணவிகளிடம் அத்துமீறி பாலியல் ரீதியான தொந்தரவுகளைக் கொடுக்கிறார்.
இது தொடர்பாக புகார் தெரிவித்தால் பள்ளி அசல் சான்றிதழை தரமாட்டோம், உங்கள் கல்லூரி சான்றிதழும் கிடைக்காது என மிரட்டுகிறார். கொலை மிரட்டல் கூட செய்துள்ளார்”எனக் குறிப்பிட்டிருந்தது.
இது குறித்து விசாரித்த இரணியல் காவல் துறையினர் விசாரணை நடத்தி பள்ளி தாளாளர் செல்வகுமார் மற்றும் அவரது மனைவியும் கல்லூரி முதல்வருமாகிய செல்வராணி ஆகியோர் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை சட்டம் மற்றும் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
மாணவிகள் பெற்றோருடன் தர்ணா கல்லூரி தாளாளர் ஆன்றோ செல்வகுமாரை விரைந்து கைது செய்யக் கோரியும், அங்கு பயிலும் மாணவிகளின் அசல் சான்றிதழ்கள் மற்றும் கல்வி கட்டணத்தை திரும்ப பெற்று தர வலியுறுத்தியும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவிகள் பெற்றோருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:#Exclusive தற்காப்புக்காக கொலைசெய்த இளம்பெண்ணை விடுதலைசெய்த எஸ்.பி.