கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த 67வது ஆண்டு தினம் நேற்று (நவ. 1) கொண்டாடபட்டது. தமிழக அரசு சார்பில் நாகர்கோவிலில், குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
அதேபோல், நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் மற்றும் களியக்காவிளையில் உள்ள நினைவு சின்னம், புது கடையில் உள்ள நினைவு ஸ்துபியில் பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருவிதாங்கூர் சமஸ்தானம்:1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது. அதற்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த கன்னியாகுமரி, பல வகையிலும் இன்னல்களுக்கு ஆளாகி வந்தது. மாபெரும் போராட்டங்கள், பல தியாகம், உயிரிழப்புகள் என ஏராளமான வரலாறுகள் உள்ளன.
நீண்ட நெடிய போராட்டங்களுக்கு பின்னர், தாய் தமிழகத்தோடு குமரி இணைந்து 67 ஆண்டுகள் நிறைவு பெற்றது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குமரி மாவட்டம் இருந்த போது, அங்குள்ள தமிழர்கள் பல்வேறு வகையிலும் வஞ்சிக்கப்பட்டு வந்தனர். ஜாதிய பாகுபாடுகள் கடுமையாக இருந்த காலம் அது எனக் கூறப்படுகிறது. மன்னருக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் பிரதிநிதித்துவம் மற்றும் நிலங்களும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அடுக்கடுக்காய் வரிகள் விதிக்கப்பட்டதாகவும், குறிப்பிட்ட சமூக பெண்கள் மேல் சேலை அணிய கூட அனுமதி மறுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
தீவிர போராட்டம் :முத்துகுட்டி சுவாமி, சுவாமிதோப்பில் சமத்துவ கிணறு வெட்டி சாதி பாகுபாட்டை ஓரம் கட்டினார். இடுப்பில் துண்டு கட்டியவர்களை தலையில் துண்டு கட்ட வைத்தார். தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தாலும், ஆதிக்க அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் மார்ஷல் நேசமணி தலைமை ஏற்ற பின்னர், தீவரமாக மாறியது.
நேசமணி தலைமையில் தீவிரமடைந்த போராட்டம் வாயிலாக தமிழகத்துடன் குமரியை இணைக்க வைத்தது. சிதம்பரநாதன் நாடார், ரசாக், பி.எஸ்.மணி, குஞ்சன்நாடார், தாணு லிங்க நாடார், பொன்னப்ப நாடார், சிதம்பர நாதன் நாடார் என பலரது போராட்டம் இதில் குறிப்பிடத்தக்கது.
பின்னர் மொழி வாரியாக மாநிலம் பிரிக்கப்பட்ட போது குமரி இணைப்பு போராட்டம், மேலும் வலுப்பெற்றது. 1948ஆம் ஆண்டு குமரி, மங்காடு பகுதியில் குமரி உரிமை மீட்புப் போராட்டப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கேரளக் காவலர்கள் கூட்டத்தை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 பேர் பலியானார்கள். திருவிதாங்கூர் சமஸ்தானம் 1954ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 தினத்தை விடுதலை தினமாக அறிவித்தது.