கன்னியாகுமரி: மெதுகும்மல் பகுதியைச்சேர்ந்தவர் சுனில், இவரது மகன் அஸ்வின் (11). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 24 ஆம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய அந்தச்சிறுவனுக்கு, அப்பள்ளியில் படித்த மற்றொரு மாணவன் குளிர்பானம் கொடுத்ததாகத் தெரிகிறது.
அந்த குளிர்பானத்தைக் குடித்த சிறுவனுக்கு, சிறிது நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவனை மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்நிலையில், அந்தச்சிறுவனுக்கு வாயில் புண் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காகக் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவர்கள் சோதனை செய்ததில் சிறுவன் குடித்த குளிர்பானத்தில் ஆசிட் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், சிறுவனின் இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பெற்றோர் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து நெய்யாற்றங்கரையில் உள்ள மருத்துவமனையில் இரண்டு கிட்டினிகளும் செயல் இழந்து உயிருக்குப்போராடி வந்த சிறுவன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல்துறை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதங்கோடு அருகே சம்பந்தப்பட்ட பள்ளியில் சிபிசிஐடி நெல்லை மண்டல துணை கண்காணிப்பாளர் சங்கர் மற்றும் சிபிசிஐடி ஆய்வாளர் பார்வதி தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதேபோல் பள்ளி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து, சிறுவனின் வீட்டிற்குச் சென்று பெற்றோரிடமும் விசாரணை நடத்தினர். மாணவனுக்குச் சிகிச்சை அளித்த கேரளாவில் உள்ள மருத்துவமனைக்கும் சென்று முதற்கட்ட விசாரணை செய்தனர். சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை சிபிசிஐடி போலீசார் சேகரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:தவறான கேள்வியை தவிர்த்த மாணவருக்கு மதிப்பெண்..!