கன்னியாகுமரி மாவட்டம், இடலாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் முகமது(52). இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஹஜரா(43). இவர், இடலாக்குடியில் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். கடந்த மாதம் 30ஆம் தேதி, தக்கலையில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு தனது மகன்களுடன் ஹஜரா சென்றுள்ளார். பின்னர், இன்று காலை அவர் வீட்டிற்கு திரும்பி உள்ளே சென்று பார்த்த போது, ஆங்காங்கே பொருள்கள் சிதறி கிடந்ததோடு, வீட்டின் மொட்டை மாடியின் கதவும் உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, கொள்ளையர்கள் மாடி வழியாக உள்ளே புகுந்து, வீட்டில் வைத்திருந்த ரூ.24 லட்சம் பணத்தை திருடி சென்றதையறிந்து அதிர்ச்சியடைந்தார்.
மொட்டை மாடி கதவை உடைத்து வீட்டில் இருந்த ரூ.24 லட்சம் கொள்ளை! - இடலாக்குடி
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் வீட்டின் மொட்டை மாடி கதவை உடைத்து ரூ.24 லட்சம் பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உடனடியாக இது குறித்து கோட்டார் போலீசாருக்கு, ஹஜரா தகவல் தெரிவித்தார். பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நேரில் விசாரணை நடத்தினர். இதில், ஹஜரா தனது கணவரின் அக்கா மகளிடம் இருந்து பெற்ற பணம் ரூ.24 லட்சத்தை வீட்டில் வைத்திருந்ததும், அது பற்றி நன்கு அறிந்த நபர்களே பணத்தை திருடியிருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக சம்பவ இடத்தில் பதிவான கைரேகைகள், வீடு அமைந்த பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றினர். மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.