கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கிள்ளியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, வைரஸ் தொற்று இருப்பது நேற்று இரவு (ஜூலை.26) உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ராஜேஷ்குமார் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில், கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வருபவர்களால் பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து, கரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.