கன்னியாகுமரி: கேரள மாநிலம், விழிஞ்சம் பகுதியைச் சேர்ந்த முகமது நஜீப் - சுஜிதா தம்பதியரின் 12 வயது மகன் ஆதில் முகமது, அப்பகுதியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஆண்டு கோடை விடுமுறையில் கன்னியாகுமரி மாவட்டம், திட்டுவிளையில் உள்ள தனது பாட்டி வீட்டுக்குத் தாயாருடன் சென்றிருந்த ஆதில் முகமது, மே மாதம் ஆறாம் தேதி திடீரென மாயமானார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, திட்டுவிளை அருகே மணத்திட்டை பகுதியில் உள்ள நந்திரிக்குழி குளத்திலிருந்து ஆதில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
திட்டுவிளை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஆதில் முகமதுவை குளத்திற்கு அழைத்துச் சென்றபோதுதான் மரணம் ஏற்பட்டுள்ளது என்றும், அதனால், ஆதில் மரணத்திற்கு அப்பகுதி சிறுவன் ஒருவன் காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் ஆதிலின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். அதைத் தொடர்ந்து பூதப்பாண்டி போலீசார் சிறுவனை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆயினும், மரணம் தொடர்பான உண்மைகள் வெளியாகவில்லை.
இதனிடையே, ஆதில் முகமதுவின் பெற்றோர் கேரள முதலமைச்சரை நேரில் சந்தித்து தங்கள் மகனின் மரணம் தொடர்பான உண்மையான காரணத்தைக் கண்டறிய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். அதில், சிறுவன் மரணம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, ஆதில் முகமது மரணம் தொடர்பாக தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் மேற்பார்வையில் மீண்டும் விசாரணை தொடங்கியது. பல்வேறு கட்டங்களாக விசாரணை நடைபெற்றது. ஆதில் முகமதுவை அழைத்துச் சென்ற 14 வயது சிறுவனிடமும் விசாரணை நடைபெற்றது. சம்பவம் நடைபெற்ற குளத்திற்கும் அழைத்துச் சென்று விசாரித்தனர். காணாமல் போன அன்று ஆதில் முகமது டி-ஷர்ட் அணிந்திருந்த நிலையில், சடலமாக மீட்கப்படும் போது டி-ஷர்ட் இல்லை. எனவே, ஆதில் முஹம்மது அணிந்திருந்த டீ- ஷர்ட்டை கண்டுபிடிப்பதை முக்கியமானதாக கருதிய போலீசார், குளத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றி சோதனை நடத்தினர். ஆயினும், டீ- ஷர்ட் கிடைக்கவில்லை.