கன்னியாகுமரி: நாகர்கோவில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் சுஜி என்ற காசி மீது சென்னையைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் ஒருவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாக ஆன்லைன் மூலம் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு புகார் செய்திருந்தார். இதே போன்று நாகர்கோவில் பகுதியிலும் ஒரு பெண் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காசியை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் சமூக வலைதளங்கள் மூலம் ஏராளமான இளம் பெண்கள், முக்கிய பிரமுகர்களின் மனைவி, கல்லூரி மாணவிகள் இவரது வலையில் சிக்கியுள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்கிலும், கன்னியாகுமரி மகளிர் காவல் நிலையத்தில் ஒரு போக்சோ வழக்கு, என மொத்தம் எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வடசேரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கந்து வட்டி வழக்கும், மற்ற காவல் நிலையங்களில் பெண் பாலியல் வன்கொடுமை மற்றும் பெண் ஆபாச படம் எடுத்து மிரட்டி வழக்குகள் பதிவாகியுள்ளன. காசி விவகாரம் பெருமளவில் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது.